செய்திகள்

அரக்கோணம் அருகே லாரி மீது கார் மோதல்- தந்தை-மகள் பலி

Published On 2018-08-05 18:55 IST   |   Update On 2018-08-05 18:55:00 IST
அரக்கோணம் அருகே லாரி மீது கார் மோதியதில் தந்தை, மகள் இறந்தனர். ஆம்பூர் அருகே கார் மோதி பெண் பலியானார்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). இவர், பெங்களூரில் தங்கி வியாபாரம் செய்து வந்தார். செல்வராஜிக்கு புஷ்பா (42) என்ற மனைவியும், ரித்திகா (11) என்ற மகளும் இருந்தனர். நேற்றிரவு, சொந்த ஊரான ஈசலாபுரத்திற்கு செல்வராஜ் தனது மனைவி, மகள் மற்றும் நண்பர்கள் 2 பேருடன் காரில் புறப்பட்டார்.

நள்ளிரவு 1 மணியளவில் சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் உள்ள கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின் பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முகப்பு பகுதி நொறுங்கி சேதமடைந்தது.

செல்வராஜ், அவரது மகள் உள்பட 5 பேரும் பலத்தகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜூம், ரித்திகாவும் இறந்தனர். மற்ற 3 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து, கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே மின்னூர் எம்.சி. ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா (வயது 50). இவர், பெட்ரோல் பங்க்கில் துப்புரவு வேலை செய்து வந்தார். இன்று காலை 9 மணிக்கு மல்லிகா வேலை முடிந்து தேசிய நெடுசாலையோரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பெங்களூரில் இருந்த வந்த கார் திடீரென மல்லிகா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையோர பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து பலியானார்.

விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த சீனிவாசன் மனைவி பிரேமா (70) பலத்த காயமடைந்தார். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News