செய்திகள்

ஈரோட்டில் லாரி உரிமையாளர் தற்கொலை: வாலிபர் கைது

Published On 2018-08-04 16:38 IST   |   Update On 2018-08-04 16:38:00 IST
ஈரோட்டில் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேரை தேடி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு நகராட்சி நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 38). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தட்சிணாமூர்த்தி சொந்தமாக 2 மணல் லாரி வைத்து மணல் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த 3 பேரிடம் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

மாதாமாதம் வட்டி பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் தொழில் மந்தம் காரணமாக சரி வர வட்டி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் தட்சிணா மூர்த்திக்கு நெருக்கடி கொடுத்தனர். பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2 தினங்களுக்கு முன்பாக தட்சணாமூர்த்தியின் 2 மணல் லாரிகளை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த தட்சிணாமூர்த்தி சோலாரில் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். நிதி நிறுவன உரிமையாளர்கள் அடியாட்களுடன் வந்து தட்சிணா மூர்த்தியை மிரட்டி விட்டு 2 லாரிகளையும், ஒரு பைக்கையும் எடுத்துச் சென்றதால் மனமுடைந்து தட்சிணா மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி சித்ரா போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய லக்காபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேரை தாலுகா போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News