செய்திகள்

வங்கி அதிகாரியிடம் விலை உயர்ந்த செல்போன் என்று கூறி சோப்பை கொடுத்து ஏமாற்றிய கும்பல்

Published On 2018-08-02 14:16 IST   |   Update On 2018-08-02 14:16:00 IST
மயிலாப்பூரில் வங்கி அதிகாரியிடம் விலை உயர்ந்த செல்போன் என்று கூறி சோப்பை கொடுத்து ஏமாற்றிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை லஸ்கார்னரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.

இங்கு மானேஜராக பணிபுரிபவர் ரமேஷ். நேற்று காலை இந்த வங்கிக்கு 2 டிப்டாப் வாலிபர்கள் வந்தனர்.

மானேஜர் ரமேசை சந்தித்த இவர்கள், செல்போன் விற்பனை செய்பவர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். வங்கி மானேஜர்களுக்கு குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு போன்களை விற்பனை செய்து வருவதாக கூறினார்கள்.

ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போனை ரூ.15 ஆயிரத்துக்கு தருவதாக அவரிடம் தெரிவித்தனர். ஒரு விலை உயர்ந்த செல்போனை காட்டி அதில் என்ன என்ன வசதிகள் உள்ள என்பதை டெமோ செய்து காட்டினார்கள்.

இதை பார்த்த வங்கி மானேஜர் ரமேஷ் தனக்கு ஒரு போன் வேண்டும் என்றார். அதற்கான தொகை ரூ.15 ஆயிரத்தையும் அவர்களிடம் கொடுத்தார்.

பணத்தை வாங்கிக் கொண்ட டிப்டாப் வாலிபர்கள், புதிய செல்போன் இருக்கும் சிறிய அட்டை பெட்டி ஒன்றை மானேஜரிடம் கொடுத்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் வங்கியில் இருந்து சென்று விட்டனர்.

மானேஜர் ரமேஷ் செல்போன் அட்டை பெட்டியை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதில் சலவை சோப்பு இருந்தது.

விலை உயர்ந்த செல்போன் என்று நம்பி ரூ.15 ஆயிரத்துக்கு சோப்பை வாங்கி ஏமாந்த அவர், மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மோசடி செய்தவர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News