செய்திகள்

தற்கொலை செய்த மாணவி உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு- பெற்றோர் மீது வழக்கு

Published On 2018-08-01 15:43 IST   |   Update On 2018-08-01 15:43:00 IST
தற்கொலை செய்த மாணவி உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக பெற்றோர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பாலாமணி (வயது 20). விருதுநகர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால் தற்போது திருமணம் வேண்டாம். தொடர்ந்து படிக்க வேண்டும் என பாலாமணி கூறினாராம். இருப்பினும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதனால் கடந்த 29-ந் தேதி பாலாமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்தாமல் பெற்றோரும், உறவினர்களும் பாலாமணி உடலை எரித்து விட்டனர். இந்த நிலையில் தற்கொலை செய்த மாணவியின் உடல் எரிக்கப்பட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

வில்லூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாலாமணியின் பெற்றோர் முருகன்-பழனியம்மாள், உறவினர்கள் செல்லப் பாண்டி, சுக்கிரன், கிருஷ்ணன், ராமர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News