செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றினர்.

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

Published On 2018-08-01 08:24 GMT   |   Update On 2018-08-01 08:24 GMT
திருவண்ணாமலையில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர். #GreenWayRoad #Farmersprotest

திருவண்ணாமலை:

சென்னையில் இருந்து சேலத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் கையகப்படுத்தப்படுகிறது.

இதற்கு விவசாயிகள் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பசுமை சாலைக்காக தனது நிலத்தை பறிகொடுத்த விரக்தியில் செங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிராக ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் இன்று திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் நடைப்பயணம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்காக திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் அங்கு திரண்டனர்.

நடை பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. தடையை மீறி கம்யூனிஸ்டு கட்சியினர் நடை பயணயத்துக்கு ஆயத்தமாகினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, ஏ.டி.எஸ். பிக்கள் அசோக்குமார், வனிதா, டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

நடைபயணம் சென்ற கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

நடை பயண தொடக்க விழா பகுதியை சுற்றிலும் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். நடைபயண குழுவினர் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

அங்கு அமைக்கப்பட்ட மேடையில் சென்னை, மதுரை, சேலம், கன்னியாகுமரி கலைக்குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன அதில் 8 வழிச்சாலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் பாடப்பட்டன.

இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நடைபயணத்துக்கு புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் நடைபயணத்துக்கு அனுமதி இல்லை இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இதனால் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்கு வாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட 500க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #GreenWayRoad #Farmersprotest

Tags:    

Similar News