செய்திகள்

மண்டபம் இடிப்பில் முறைகேடு நடந்ததா?- டி.எஸ்.பி. விசாரணை

Published On 2018-07-31 15:38 IST   |   Update On 2018-07-31 15:38:00 IST
ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை மண்டபம் இடிப்பு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்ட விவகாரம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை மண்டபம் இடிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், முறையற்ற வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவபக்தர் டில்லிபாபு என்பவர் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குற்றம் சாட்டப்பட்ட இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, வேலூர் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சிபுரம் துணை ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், பொறியியல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் மண்டப இடிப்பு குறித்து விசாரணை நடத்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் செயல் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது எதுவும் கூற மறுத்து விட்டனர்.

இக்கோவிலில் இருந்த பழைமை வாய்ந்த சோமஸ்கந்தர் சிலை மாற்றப்பட்டதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் நேரடியாக கோவிலுக்கு பலமுறை வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மண்டப இடிப்பு குறித்து இப்பிரிவின் டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்ட விவகாரம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News