செய்திகள்

சிறுபான்மையின மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு- கலெக்டர் தகவல்

Published On 2018-07-28 10:20 GMT   |   Update On 2018-07-28 10:20 GMT
கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி சிறுபான்மையின மக்களுக்கு பொருளாதார கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் இந்த கடன் உதவிகளை பெற்று பயனடையலாம். இதன்மூலம், தனி நபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான கடன், கல்வி கடன், கறவை மாடு, ஆட்டோ, தையல் எந்திரம் வாங்க கடன், மளிகை கடை, ஜவுளி வியாபாரம் உள்பட அனைத்து வகை கடன்களும் வழங்கப்படும். இக்கடன் உதவிகளை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மத்திய, நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் 2017-18 -ம் நிதி ஆண்டில் 228 பேருக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் பரிந்துரை செய்து அதில் முதற்கட்டமாக 113 நபர்களுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஒரு வாரம் இம்முகாம் நடைபெறும். இதனை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News