செய்திகள்

புதிய பல்வகை தொழில் நுட்ப கல்லூரி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2018-07-27 16:23 IST   |   Update On 2018-07-27 16:23:00 IST
வனவாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாமாண்டு பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.
சேலம்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சேலம் கமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தை திறந்து வைத்தார்.

வனவாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்த அவர் முதலாமாண்டு பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.

எடப்பாடி தொகுதிக்குட்ட பகுதிகளில் நடைபெற உள்ள அரசு விழாவில் ரூ.4.99 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1278 பயனாளிகளுக்கு 8.09 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வெள்ளாளபுரம் தாய் திட்டம் 2-ன் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் விழாவில் கொங்கணாபுரம் புதிய காவல் நிலையம் மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

முன்னதாக அவருக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பன்னீர் செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஏ.பி.சக்திவேல், வெற்றிவேல், மனோண்மணி, சின்னதம்பி, மருதைமுத்து, சித்ரா, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.ராமச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாச்சலம், கூட்டுறவு வங்கி தலைவர் நேதாஜி, துரைராஜ், பெரியபுதூர் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் ஜான்கென்னடி, முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன், புல்லட் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News