செய்திகள்

காட்பாடி விருதம்பட்டில் தி.மு.க. பிரமுகர் கார் தீ வைத்து எரிப்பு

Published On 2018-07-27 10:51 GMT   |   Update On 2018-07-27 10:51 GMT
விருதம்பட்டில் தி.மு.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:

காட்பாடி விருதம்பட்டு சிவராஜ் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (46). மாநகர தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர். கடந்த 4-ந் தேதி மாலை முன்விரோத மோதலில் வஞ்சூரை சேர்ந்த கும்பல் சீனிவாசனை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில், படுகாயங்களுடன் சீனிவாசன் உயிர் தப்பினார். இந்த நிலையில், காட்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணனின் காரை, சீனிவாசன் பயன்படுத்தி வந்தார். தனது வீட்டு முன்பு நேற்றிரவு காரை நிறுத்தி வைத்திருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் சீனிவாசனின் தாய் புவனேஸ்வரி திருவண்ணாமலைக்கு சென்று வீடு திரும்பினார். அவர் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரின் மதிப்பு ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். புகாரில், தன்னை வெட்டி கொல்ல முயன்ற அதே கும்பல், காரை தீ வைத்து எரித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விருதம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News