செய்திகள்

தற்காலிக செவிலியர்களுக்கு ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

Published On 2018-07-26 03:58 GMT   |   Update On 2018-07-26 03:58 GMT
தற்காலிக செவிலியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். #MinisterVijayabaskar #Nurses
சென்னை:

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிய தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு ஆரம்பத்தில் மாத ஊதியமாக ரூ.7,700 வழங்கப்படுகிறது.

இந்த தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்கள் பணியிடங்கள் காலியாகும்போது அந்த பணியிடங்களில் நிரந்தர செவிலியர்களாக பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தும் இந்தமுறை இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



நிரந்தரமாக்கப்பட்ட செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்படும்போது குறைந்தபட்சம் ரூ.36 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இத்தற்காலிக செவிலியர்களின் பணிகளையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு அவர்களின் ஊதியத்தை உயர்த்த முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து தற்காலிக செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தை ரூ.7 ஆயிரத்து 700-ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஆணை வெளியிட்டார்.

இந்த ஊதிய உயர்வு முன்தேதியிட்டு 1.4.2018 முதல் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.500 ஊதிய உயர்வும் அளிக்கப்படும். இதுதவிர தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்தப்படும். இதன் மூலம் தொகுப்பூதியம் பெறும் 12 ஆயிரம் செவிலியர்கள் பயன்அடைவார்கள்.

மேற்கண்ட தகவல்கள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #MinisterVijayabaskar #Nurses
Tags:    

Similar News