செய்திகள்

வேலூரில் தூங்கிக் பயணிகளை அடித்து எழுப்பிய போலீஸ் ஏட்டுக்கு அடி, உதை

Published On 2018-07-25 12:05 GMT   |   Update On 2018-07-25 12:05 GMT
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை அடித்து எழுப்பியதால் போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை விழுந்தது.
வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். திருப்பதிக்கு செல்லும் பயணிகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்து பஸ்களில் ஏறுகின்றனர். மேலும் இங்கிருந்து சென்னை, திருச்சி, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் செல்வதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பலர் புற காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்துமிடத்தில் தூங்குவார்கள். திருட்டு போன்றவற்றை தடுக்க தினமும் வடக்கு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட வேலூர் வடக்கு போலீஸ் ஏட்டு ஸ்ரீதர் என்பவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து எழுப்பியதாக கூறப்படுகிறது.

எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, ஏட்டு ஸ்ரீதர் அடித்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர், நான் எல்லை பாதுகாப்பு படை வீரர் எதற்கு அடித்து எழுப்புகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ஏட்டு ஸ்ரீதர், மூதாட்டி ஒருவரை தனது காலால் உதைத்து எழுப்பியதாக தெரிகிறது. இதைப்பார்த்த பயணிகள் ஆத்திரமடைந்து ஸ்ரீதரை அடித்து, உதைத்தனர். அப்போது அங்கு வந்த ஊர்க்காவல் படை வீரர், பயணிகளை தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் அவரை அடிப்பதை நிறுத்தவில்லை.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தினார்கள். மேலும், ஸ்ரீதரை அங்கிருந்து போலீசார் அழைத்துச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News