செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் லாரியை திருடி டயர்களை விற்க முயன்ற 3 பேர் கைது

Published On 2018-07-22 11:40 GMT   |   Update On 2018-07-22 11:40 GMT
கிருமாம்பாக்கத்தில் லாரியை திருடி டயர்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாவர்:

வளவனூர் அருகே உள்ள நலவரசன் பேட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது36). இவர் சொந்தமாக லாரி வாங்கி அவரே ஓட்டி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்கரவர்த்தி லாரியை கிருமாம்பாக்கத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் சவாரி கேட்க சென்றார்.

பின்னர் வந்து பார்த்தபோது லாரியை காணாமல் சக்கரவர்த்தி திடுக்கிட்டார். லாரியை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக்கரவர்த்தி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, குற்றபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சக்கரவர்த்தியின் லாரி கடலூர் சாலையில் உள்ள ஒரு ஓர்க்ஷாப்பில் நிறுத்தி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீசார் தமிழக போலீசார் ஒத்துழைப்புடன் அந்த ஓர்க்ஷாப்புக்கு சென்றனர். அப்போது லாரியை திருடி சென்ற வாலிபர் லாரியின் டயர்களை கழற்றி கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாகூர் காமராஜ்நகரை சேர்ந்த குமரகுரு (வயது35) என்பதும், இவரும் உருளையன்பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அலாம்தீன் (26) என்பவருடன் சேர்ந்து லாரியை திருடி டயர்களை கழற்றி மற்றொரு லாரி உரிமையாளருமான நிர்மல்ராஜ் என்ற வாலிபரிடம் விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை திருடிய குமரகுரு, அலாம்தீன் மற்றும் லாரியை திருட தூண்டுதலாக இருந்த லாரி உரிமையாளர் நிர்மல்ராஜ் என்ற விமல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News