செய்திகள்

மருத்துவமனை கட்டிட விபத்து - என்ஜினீயர்கள் 2 பேர் கைது

Published On 2018-07-22 14:38 IST   |   Update On 2018-07-22 14:38:00 IST
மருத்துவமனை கட்டிட சாரம் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். #hospitalbuildingcollapses

சென்னை:

சென்னை அருகே தனியார் மருத்துவ மனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட்டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச் சுவர் மீது விழுந்தது. மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன.

இரும்பு சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்..



பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் 16 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பேரும் சேர்க்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மோகன், ராஜன், சந்தோஷ் ஆகிய 3 தொழிலாளர்களுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்ததால் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.

இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. சரிந்த ராட்சத இரும்பு சாரங்களை எந்திர கட்டர்கள் மூலம் வெட்டி எடுத்தார்கள். ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதில் கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உடனடியாக என்ஜினீயர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட விபத்து நடந்த மருத்துவமனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இந்த விபத்தால் அங்கு வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

கட்டிட விபத்து நடந்த இடத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன், மாநில பேரிடர் மீட்பு கமி‌ஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். #hospitalbuildingcollapses

Tags:    

Similar News