செய்திகள்

தூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும்- போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-21 07:27 GMT   |   Update On 2018-07-21 07:27 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiProtest #Sterlite
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச். அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதாடுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டனர். உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களை பாதுகாத்தனர்.

இது தொடர்பான வீடியோவை பார்த்தால் தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் கையாண்ட விதம் சரியானது என்பது தெரியவரும் என்றார்.

பின்னர் அவர் நீதிபதியைப் பார்த்து, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த வீடியோவை பார்க்கலாம், அன்றைய தினம் போலீசாரின் நிலையைப் பார்த்தால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. கலவரக்காரர்களால் சூழப்பட்டனர். இந்த வீடியோவை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகளுக்கு வருகிற திங்கட்கிழமை போட்டு காண்பிக்கப்படுகிறது என்று கூறினார்.



உடனே நீதிபதி கிருபாகரன் கூறுகையில், அந்த வீடியோவை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டுங்கள், பொதுமக்கள் பார்க்கட்டும், அதன் பிறகு நாங்கள் பார்த்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்கிறோம். முதலில் மக்கள் உண்மையை புரிந்து கொள்ளட்டும். போலீசார் அத்து மீறினார்களா? அல்லது போராட்டக்காரர்கள் அத்து மீறினார்களா? என்பதை தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன் நாம் வெளிப்படையாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது என்றார். #ThoothukudiProtest #Sterlite
Tags:    

Similar News