செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னரே பொறுப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2018-07-20 10:16 IST   |   Update On 2018-07-20 10:16:00 IST
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னரே பொறுப்பு என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜூலை மாதம் வரையிலான அரசு செலவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த மாதம் 2-ந்தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு அதை சட்டசபையில் தீர்மானமாக ஏற்று நிறைவேற்றுவார்கள்.

அப்படி நிறைவேற்றினால்தான் அடுத்த மாதத்தில் இருந்து அரசு செலவுக்கு பணம் கிடைக்கும். ஆனால், கவர்னர் கிரண்பேடி இதுவரை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் பட்ஜெட்டை சட்டசபையில் நிறைவேற்ற முடியவில்லை. அது நிறைவு பெறாமலேயே சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இனி கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளித்தால் மீண்டும் சட்டசபை கூட்டத்தை நடத்தி பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாத அரசு செலவுக்கு பணம் செலவழிக்க முடியாது.


இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். மற்ற திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜூன் மாதத்தில் சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுத்த போது, மத்திய அரசு 45 நாட்கள் கோப்பை வைத்திருந்த காரணத்தால் ஜூன் மாதத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை.

2 முறை உள்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்திய பிறகே ஒப்புதல் தரப்பட்டது. காலதாமதத்துக்கு மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம் ஆகும்.

நேற்று முன்தினம் சட்டசபையின் அனைத்து அலுவல்களும் முடிக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த வெட்டு தீர்மானமும் திரும்ப பெறப்பட்டது. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த பட்ஜெட் சட்ட வரைவு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் உள்நோக்கம் காரணமாக, அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தால் சட்டசபையில் பட்ஜெட் சட்ட வரைவு நிறைவேறி இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கான கோப்புகள் 25-ந் தேதியுடன் தயார் செய்யப்பட்டு அந்த கோப்புகள் வங்கி கணக்குக்கு செல்ல வேண்டும். அது மட்டுமின்றி தற்போது நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.

அரசு ஊழியருக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னர்தான் அதற்கு பொறுப்பு.

இதில், இருந்து கவர்னர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா? யாருடைய தூண்டுதலில் செயல்படுகிறார்? அல்லது மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறாரா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது, எங்கள் அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் என்பதை தவிர வேறு இல்லை. விரைவில் இதற்கு விடிவுகாலம் வரும் சூழ்நிலை உள்ளது. மாநில அந்தஸ்து கோரி அனைத்து கட்சியினரும் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம்.

பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான நேரம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது சம்பந்தமாக கவர்னர் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இந்த வி‌ஷயத்தில் என் மீது குற்றம் சுமத்துவது தவறானது. 26-ந்தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என்று முதலில் தெரிவித்து இருந்தார்கள். ஆனால், 19-ந் தேதியே கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.

முன்கூட்டியே கூட்டத்தை முடித்து விட்டதால் உரிய நேரத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறினார். #PuducherryAssembly #Narayanasamy
Tags:    

Similar News