செய்திகள்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-07-18 10:10 GMT   |   Update On 2018-07-18 10:10 GMT
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பெண் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நாள் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் வந்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர்.

இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டவாறு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர்.

தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தீக்குளிக்க முயன்றது மதுரை மாவட்டம் மேலூர் நேதாஜி ரோட்டை சேர்ந்த சலீம் மனைவி ‌ஷகிராபானு (வயது 43) என்பது தெரிய வந்தது. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரிடம் கடன் வாங்கியுள்ளார். பல்வேறு தவனைகளில் கடன் பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்பும் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து மேலூர் போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.

இதனால் கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொலைமிரட்டல் விடுப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ‌ஷகிரா பானு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
Tags:    

Similar News