செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மணல் திருட்டை தடுக்க காவிரி ஆற்றில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபடும் போலீசார்

Published On 2018-07-11 16:41 GMT   |   Update On 2018-07-11 16:41 GMT
மோட்டார்சைக்கிளில் மணல் திருட்டை தடுக்க காவிரி ஆற்றில் பள்ளம் தோண்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்படுகையான பொத்தனூர் குட்டுக்காடு பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் மது அருந்துவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக அப்பகுதிக்கு குளிக்கச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வராததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் காவிரியாற்றில் இருந்து முறைகேடாக மணலை மூட்டைகளாக கட்டி, மோட்டார்சைக்கிள்கள் மூலம் மணலை கடத்தி விற்பனை செய்வது அதிகரித்தது.

இந்த நிலையில், பரமத்திவேலூர் போலீசார் பொத்தனூர் காவிரியாறு பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வருகின்றனர். இதன்மூலம் காவிரி ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிளில் செல்லமுடியாத நிலை ஏற்படும்.

இதையும் மீறி முறைகேடாக மணல் எடுப்பவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ரோந்துப்பணிகள் தொடரும் எனவும் பரமத்திவேலூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘ காவிரி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் சென்று மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்திய போது, மோட்டார் சைக்கிளில் தான் இந்த மணல் கடத்தல் பெரும்பாலும் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்குள் செல்வதை தடுக்க காவிரி ஆற்றின் படுகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதன் மூலம் இந்த மணல் கடத்தலை தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்கள். 
Tags:    

Similar News