செய்திகள்

காதல் தகராறில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

Published On 2018-06-27 16:39 IST   |   Update On 2018-06-27 16:39:00 IST
மாதவரத்தில் காதல் தகராறில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தார்.
மாதவரம்:

மாதவரம் அண்ணா தெருவில் வசித்து வந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன். இவரது மகள் கலைவாணி (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). பள்ளி வாகன டிரைவர்.

இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மணிகண்டனின் நடவடிக்கை பிடிக்காததால் கலைவாணி விலகி சென்றுள்ளார். ஆனால் அவர் கலைவாணியை விடாமல் விரட்டி காதலித்துள்ளார். கல்லூரிக்கு சென்றுவரும் போது அவரை மடக்கி தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஆனால் கலைவாணியோ உன்னை பிடிக்கவில்லை என்று கூறி விலகிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் பெற்றோருடன் கலைவாணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அவர் மணிகண்டனை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், “நீ எனக்கு கிடைக்காவிட்டால் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு உன்னை அவமானப்படுத்துவேன்” என்று மிரட்டியுள்ளார்.

இதனால் வேதனை அடந்த கலைவாணி இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவில் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

நள்ளிரவில் மகள் 3-வது மாடிக்கு செல்வதை முருகன் பார்த்தார். அவர் மேலே செல்வதற்குள் கலைவாணி மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

மகள் குதித்ததை பார்த்து காப்பாற்ற முருகனும் கீழே குதித்ததில் 2 கால்களும் முறிந்தன. இருவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மாணவியை மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News