செய்திகள்

பண்ருட்டியில் தொழில் அதிபரை கடத்திய புதுவை கூலிப்படையை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

Published On 2018-06-25 20:04 IST   |   Update On 2018-06-25 20:04:00 IST
தொழில் அதிபரை கடத்திய புதுவை கூலிப்படையை பிடிக்க தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பண்ருட்டி:

பண்ருட்டி தொழில் அதிபர் விஜயரங்கனை நேற்று முன்தினம் மர்ம மனிதர்கள் தாக்கி காரில் கடத்தி சென்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் கடத்தப்பட்ட விஜயரங்கனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடத்தல்காரர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று விஜயரங்கன் வீடு திரும்பினார்.

போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபரை கடத்தியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

விஜயரங்கனுக்கு, புதுவையை சேர்ந்த சிலருடன் தொழில் ரீதியாக பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பிரச்சினை ஏற்பட்டு புதுவையை சேர்ந்த கூலிப்படையினர் விஜயரங்கனை கடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கூலிப்படையினரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கூலிப்படையினர் பிடிபட்டால்தான் விஜயரங்கன் கடத்தப்பட்டது ஏன்? என்பதற்கான முழு விவரங்களும் தெரியவரும்.

Tags:    

Similar News