செய்திகள்
மாமல்லபுரம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த மெய்யூர் குப்பத்தை சேர்ந்தவர் சேகர். மீனவர். இவரது மகன் புகழேந்தி (வயது19) பிளஸ்2 முடித்துள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இருந்தார்.
இவர் குடும்பத்தினருடன் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அங்குள்ள தெப்பகுளத்தில் குளிக்க சென்றபோது படிக்கட்டில் வழுக்கி விழுந்தார். இதில் புகழேந்தி குளத்தில் மூழ்கினார். அவரை உறவினர்கள் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே புகழேந்தி உயிரிழந்தார்.
கடம்பாடி கோவில் தெப்பகுளத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தால் இந்த உயிர் பலி நடந்திருக்காது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.