செய்திகள்

பெண்ணை அரிவாளால் வெட்டி 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

Published On 2018-06-22 17:13 GMT   |   Update On 2018-06-22 17:13 GMT
பெண்ணை அரிவாளால் வெட்டி 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கரூர்:

தென்னிலை அருகே உள்ள கிடைக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஈஸ்வரி(வயது 45). இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென்னிலையில் இருந்து கிடைக்காரன்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கீழே தள்ளி ஈஸ்வரியை அரிவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு, அவர் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, செம்பட்டியை சேர்ந்த ராயத்அலி என்பவருடைய மகன் ஹம்ஷாஉசேன்(22) மற்றும் ஒரு சிறுவன் என 2 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி சசிகலா, பெண்ணை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஹம்ஷாஉசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தங்க சங்கிலியை பறித்ததற்காக 3 மாதங்களும், ரூ.500 அபராதமும் கட்ட தீர்ப்பு அளித்தார். மேலும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவனது வழக்கு கரூர் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News