செய்திகள்
முழுவதும் இடிந்த சிம்சனின் வீட்டை படத்தில் காணலாம்.

திருவட்டார் அருகே தொடர் மழை: பக்கத்து வீடு இடிந்து விழுந்ததில் இளம்பெண் படுகாயம்

Published On 2018-06-21 11:18 GMT   |   Update On 2018-06-21 11:18 GMT
திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவட்டார் அருகே மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது.
திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் இந்த மழை நீடிக்கிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது.

திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவட்டார் அருகே மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பெண்ணின் பெயர் அனிதா(வயது30). திருவட்டார் அருகே வேர் கிளம்பி கல்லங்குழி பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் நெல்சன் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை நெல்சன் ஆட்டோ ஓட்டுவதற்காக சென்று விட்டார். அவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட்டன. இதனால் வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்தார். இவர்களது வீட்டுக்கு பக்கத்தில் பழமையான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளரான சிம்சன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தற்போது அந்த வீடு பூட்டிக்கிடந்தது.

தொடர் மழை காரணமாக சேதம் அடைந்து இருந்த அந்த வீடு திடீரென இடிந்து அனிதா வீட்டின் மேல் விழுந்தது. இதனால் அனிதாவின் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்தது. இந்த இடிபாடுகளுக்குள் அனிதா சிக்கிக்கொண்டார்.

வீடு இடிந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அனிதாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் பொதுமக்களால் அனிதாவை மீட்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனிதாவை அவர்கள் மீட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயத்துடன் மயங்கி கிடந்த அனிதாவை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்தது பற்றி திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. திருவட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News