செய்திகள்

ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் 7 பேர் பதவி ஏற்பு

Published On 2018-06-04 19:36 GMT   |   Update On 2018-06-04 19:36 GMT
ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் 7 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதனால், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளாக 7 வக்கீல்களை நியமித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதன்படி, புதிய நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த்வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகியோர் நேற்று பிற்பகலில் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.



இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன் உள்பட அனைத்து நீதிபதிகளும், ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், நீதிபதிகள் கே.என்.பாஷா, எஸ்.நாகமுத்து, கீழ் கோர்ட்டு நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் உறவினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டதும், அவர்களை வாழ்த்தி, வரவேற்று அட்வகேட் ஜெனரல் பேசினார். அப்போது இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகள், அதாவது தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 12 பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டு என்ற பெயரை நம்முடைய வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட்டு பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

இதையடுத்து, புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்து பேசினார்கள். அப்போது, அவர்களை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்த ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான சஞ்சய்கிஷன் கவுல், ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.

அதேபோல, தங்களது பெற்றோர், மனைவி, குழந்தைகள், ஆசிரியர்கள், மூத்த வக்கீல்கள், சக வக்கீல்கள் என்று பலரது பெயரை குறிப்பிட்டும் நன்றி தெரிவித்தனர்.

தற்போது 7 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளதால், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளன. காலிப்பணியிடங்கள் 12 ஆக குறைந்துள்ளன. 
Tags:    

Similar News