செய்திகள்

போரூர் அருகே கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2018-05-24 14:57 IST   |   Update On 2018-05-24 14:57:00 IST
போரூர் அருகே சொகுசு டீக்கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
போரூர்:

போரூர் லட்சுமி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் போரூரை அடுத்த ஐயப்பந்தாங்கலில் சொகுசு டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் கடைக்குள் இருந்து கரும்புகை வந்தது. இதுபற்றி அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறிது நேத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பற்றியது. மேலும் கடைக்குள் இருந்த சிலிண்டரும் வெடித்தது. இதில் அருகில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கட்டிடத்தின் முன் பகுதிக்கும் தீ பரவியது. இதில் வங்கியின் பெயர் பலகை மற்றும் கண்ணாடிகள் எரிந்து சேதம் அடைந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடைக்குள் இருந்த மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், டேபிள், சேர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். கடைக்குள் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடையில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்ததால் அருகில் இருந்த வங்கி மற்றும் ஏ.டி.எம் மையத்திற்குள் தீ பரவுவது தடுக்கப்பட்டது. வங்கியில் தீப்பிடித்ததாக தகவல் பரவியதால் அப்போது ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News