செய்திகள்

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25-ந் தேதி தொடங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2018-05-17 05:06 GMT   |   Update On 2018-05-17 05:06 GMT
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25-ந் தேதி தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MedicalCounselling #Vijayabaskar
சென்னை:

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உயர் கல்வி பெறக் கூடிய மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக அரசு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. அதிக மதிப்பெண் பெற வேண்டும்.

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதனால் சுமார் 3500 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. இது தவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆயிரத்திற்கும் மேலாக உள்ளன. இந்த இடங்கள் கூட மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.

கடந்த 6-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவு ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகளும் வெளியாகி இருப்பதால் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25-ந் தேதி தொடங்கும். 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு 2 சுற்று கலந்தாய்வு நடைபெறும்.

இந்த மாத இறுதியில் கலந்தாய்வுற்கான விண்ணப்ப படிவம் மருத்துவ கல்வி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் வினியோகிக்கப்படும்.

இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகள், இ.எஸ்.ஐ., அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும் என்றார்.

மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ கூறுகையில், ஒருசில தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை சரண்டர் செய்ய கேட்டு இருக்கிறோம். சில கல்லூரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்திற்காக காத்து இருக்கிறது’ என்றார்.

மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம்.

Tags:    

Similar News