செய்திகள்

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

Published On 2018-05-16 14:07 GMT   |   Update On 2018-05-16 14:07 GMT
உடையார்பாளையம் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பாளையம்பாடி அரண்மனைகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் செந்தமிழ்செல்வி (25) மணகெதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும், பள்ளி விடுதியில் காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியிடம், அவரது தந்தை செல்போனில் பேசி உள்ளார். அப்போது உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாக செந்தமிழ்செல்வியிடம் கூறினார். அதற்கு தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், தம்பி, தங்கைகள் படிப்பு முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் செந்தமிழ்செல்வி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு செந்தமிழ்செல்வி சாவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News