செய்திகள்

தண்டையார்பேட்டையில் கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தற்கொலை

Published On 2018-05-10 06:49 GMT   |   Update On 2018-05-10 06:49 GMT
தண்டையார்பேட்டையில் கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். இரும்பு வியாபாரி. இவர் தொழிலுக்காக சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

இதற்காக வாரம் தோறும் ரூ.25 ஆயிரம் வட்டி கட்டி வந்தார். கடன் வாங்கிய பணத்துக்கு அதிகமாக வட்டி கட்டினார். ஆனால் அவரிடம் கந்து வட்டிக்காரர்கள் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதுகுறித்து துரைமுருகன் கடந்த மார்ச் மாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துரைமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துரைமுருகன் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது.

அதில், “என் தொழிலுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய தொகைக்கு அதிகமாக வட்டி கட்டி விட்டேன். ஆனாலும் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். மேலும் என்னை அவமானப்படுத்தி பேசினார்கள். இதனால் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி 3 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News