செய்திகள்

நீட் தேர்வு எழுத கம்மலை அடகு வைத்து கேரளாவுக்கு புறப்பட்ட அரியலூர் மாணவி

Published On 2018-05-05 10:37 IST   |   Update On 2018-05-05 10:37:00 IST
நீட் தேர்வு எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பணம் இல்லாமல் அரியலூர் மாணவி கம்மலை அடகு வைத்து கேரளாவுக்கு சென்றார். #neetexam

ஆர்.எஸ்.மாத்தூர்:

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு நீட் எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு உதவியாக அவர்களது பெற்றோரும், உறவினர்களும் உடன் சென்றனர். இதில் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் மாணவி ஹேமா தனது கம்மலை பயண செலவுக்காக அடகு வைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.

முதலில் திருச்சியில் தேர்வு மையம் இருக்கும் என்று எதிர்பார்த்த ஹேமா எர்ணாக்குளம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். பயண செலவு, தங்கும் இடம் செலவு என ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆகும் என்பதால் தாய் கவிதாவிடம் கூறி அழுதார்.

வேறு வழியில்லாமல் ஹேமா தான் அணிந்திருந்த கம்மலை தாயிடம் கழட்டி கொடுத்து அதை அடகு வைத்து பணம் பெற்று வரும்படி கூறினார். அதன் படி தாய் கவிதா ஹேமாவின் கம்மலை அடகு வைத்து பணம் பெற்று வந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஹேமா தனது தாய் கவிதா உதவியுடன் திருச்சி ஜங்‌ஷனில் இருந்து எர்ணாக்குளத்திற்கு நீட் தேர்வு எழுத புறப்பட்டு சென்றார். ஹேமா போன்று பல ஏழை கிராமத்து மாணவிகள் திடீரென பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கியும், அடகு வைத்தும் பணத்தை புரட்டியுள்ளனர்.

இந்த தேர்வு மைய குளறுபடியால் மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹேமா தெரிவித்தார். இப்போது அரசு மாணவிகளுக்கு பண உதவி, ஏராளமானோர் பல்வேறு உதவிகள் அளிக்க முன்வந்தாலும் மாணவ, மாணவிகளை தேர்வு மைய குளறுபடி கடுமையாக பாதித்துள்ளது என மாணவி ஹேமா கூறினார்.

இது தேர்வு முடிவில் பாதிப்பை வெளிப்படுத்தும் என சக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். #tamilnews #neetexam 

Similar News