செய்திகள்

கும்பகோணம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2018-05-03 22:57 IST   |   Update On 2018-05-03 22:57:00 IST
கும்பகோணம் அருகே நகராட்சி சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் இன்று காலை ஆய்வு செய்ய வந்தார்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் நகராட்சி சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடப்பணிகளையும், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகளையும் கலெக்டர் அண்ணாதுரை வந்து இன்று பார்வையிட்டார். அவருடன் கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள், கட்டிப் பொறியாளர்கள் ஆகியோர் வந்தனர்.அப்போது கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது;

கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த கட்டிடப்பணிகள் நடந்து வருகிறது. 328 குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை பாதிக்குமேல் பணிகள் முடிந்து விட்டன. இதில் 125 குடும்பங்கள் தற்போது வசித்து வருகின்றனர். மீதமுள்ள 243 கட்டிடங்கள் விரைவில் கட்டப்பட்டு அதில் சாலையோரம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை இங்கு கொண்டு வந்து குடியமர்த்தப்படுவர்.

தற்போது இங்கு மின்சாரம், குடிநீர் வசதி சரிவர இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதோடு அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News