செய்திகள்

ஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Published On 2018-05-01 01:21 IST   |   Update On 2018-05-01 01:21:00 IST
ஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #PresidentAwards # Tamil
சென்னை:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் சமஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி அந்தஸ்து பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் அறிவிப்பில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் இடம் பெறாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து பேசினார். ஜனாதிபதி விருதில் தமிழ் புறக்கணிப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தினர். 

இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக புரிதல் இல்லாமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் என
தெரிவித்துள்ளார். #PresidentAwards # Tamil #Tamilnews

Similar News