செய்திகள்
கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து மீனவர்கள் வெளிநடப்பு
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 54 மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியபோது கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் தொடர்பான புதிய வரைபடத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் கலெக்டர் சுரேஷ்குமார் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். அப்போது மீனவர்கள் கலெக்டருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் எந்த திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தேசிய மீன் தொழிலாளர் சங்க துணை தலைவர் குமரவேலு நிருபர்களிடம் கூறியதாவது.
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த வரைபடம் சட்டத்துக்கு ஒத்து போகாத வகையில் உள்ளது. இதுபோன்ற வரைபடத்தை வைத்துக்கொண்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்பது தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தீர்ப்புக்கு எதிரானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக தகவல் தெரிவித்தும் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.