செய்திகள்
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்

பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டில் பணம் எடுத்த கர்நாடக வாலிபர் கைது

Published On 2018-04-24 22:31 IST   |   Update On 2018-04-24 22:31:00 IST
நாகை திருக்குவளையில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டில் பணம் எடுத்த கர்நாடக வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 13 போலி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் திருக்குவளையைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவர் நேற்று திருக்குவளையில் உள்ள ஒரு ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கு வந்த ஒருவரிடம் பணம் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

அந்த நபர் அவரது கார்டை வாங்கி வைத்து கொண்டு போலிகார்டை ஏ.டி.எம் எந்திரத்தில் வைத்து பார்த்து விட்டு பணம் வரவில்லை என்று பட்டம்மாளிடம் திருப்பி கொடுத்து விட்டார். அவர் அங்கிருந்து சென்றதும் அந்த நபர் பட்டம்மாள் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.1000 எடுத்துள்ளார்.

இந்த நிலையில் வேறு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முயன்ற பட்டம்மாள் மர்ம நபர் போலி கார்டை கொடுத்து விட்டு தனது கார்டில் இருந்து ரூ.1000 எடுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி முதலில் பணம் எடுக்க முயன்ற வங்கி ஏ.டி.எம் எந்த வங்கிக்கு உரியது என்பதை கேட்டறிந்து அந்த வங்கியில் புகார் செய்தார். அதன்பேரில் வங்கி ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மர்ம நபர் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கீழ்வேளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 29) என்பவர் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தது தெரியவந்தது. அவர் கீழ்வேளூர் வல்லவிநாயக கோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசிப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 13 போலி ஏ.டிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். அவர் ஏ.டி.எம்முக்கு வரும் வயதானவர் களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும் நோட்டமிட்டு அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம் பின் நம்பரை தெரிந்து கொண்டு போலி கார்டுகளை அவர்களிடம் கொடுத்து விட்டு பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். அவர் பலரிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவருக்கு போலி கார்டுகளை தயாரித்து கொடுத்து பின்னணியில் வேறு நபர்கள் மூளையாக செயல்பட்டார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருக்குவளையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews

Similar News