செய்திகள்

திட்டக்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-04-24 21:49 IST   |   Update On 2018-04-24 21:49:00 IST
திட்டக்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து காரில் அவரின் குட்டாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 40). இவரது மனைவி அம்பிகா(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

வேல்முருகன் அங்குள்ள ஆவின் பாலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் ஓட்டலை மூடிவிட்டு அம்பிகா வீட்டுக்கு சென்றார். இரவில் வேல்முருகன், அம்பிகா மகன்களுடன் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை ஒரு கார் அம்பிகா வீட்டு முன்பு 3.30 மணி அளவில் வந்து நின்றது. அதில் இருந்த வாலிபர் ஒருவர் இறங்கி வெளியே வந்தார். ஒருவர் காரில் இருந்தார். வெளியே வந்த வாலிபர் அம்பிகா வீட்டின் இரும்பு கேட்டை தாண்டி உள்ளே சென்றார்.

பின்பு அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அம்பிகா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்த கொண்டு ஓடினார். உடனே திடுக்கிட்டு எழுந்து அம்பிகா திருடன்.. திருடன்... என்று கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வேல்முருகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து தப்பியோடிய வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் வீட்டு முன்பு நின்ற காரில் குடிபோதையில் மயங்கி கிடந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் மங்களூர் அருகே உள்ள மா.புடையூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பதும், நகையை பறித்து கொண்டு ஓடிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரையும், காரையும் ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர். நகையை பறித்து சென்று ஓடிய கூட்டாளி செங்கோட்டையனை தேடி வருகின்றனர். #tamilnews

Similar News