செய்திகள்

திட்டக்குடி அருகே மணல் குவாரி திறக்க எதிர்ப்பு: வியாபாரிகள் கடைஅடைப்பு- ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-23 17:38 GMT   |   Update On 2018-04-23 17:38 GMT
திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைஅடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த இளமங்கலம் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கபோவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பகுதியில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும், இதனால் விவசாயம் பாதிக்கப்படும் எனக்கூறி அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் பொதுமக்களும் இந்த பகுதியில் குவாரி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இளமங்கலம் பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை மணல் குவாரி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணல் குவாரியை திறக்கக்கூடாது என்று கூறி திட்டக்குடி வணிகர் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை திட்டக்குடி பகுதியில் உள்ள 700 கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திட்டக்குடி வணிகர் சங்க மாநில இணை செய லாளர் தங்கராசு தலைமையில் சங்க நிர்வாகிகள் சண்முகம், அண்ணாதுரை, சுரேஷ், சீனிவாசன், செல்வம், வணிகர்கள் சிவசங்கரன், கோபால், ஷாகுல் மற்றும் நிர்வாகிகள் பலர் இன்று காலை திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.

பின்னர் அவர்கள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அதன் பேரில் மங்களூர் ஒன்றிய செயலாளர் ரெங்கசுரேந்தர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News