செய்திகள்

வடலூரில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவலா?- போலீசார் வாகன சோதனை

Published On 2018-04-22 14:21 GMT   |   Update On 2018-04-22 14:21 GMT
ஆந்திராவில் இருந்து தப்பிய மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கார் மூலம் கடலூர் மாவட்டம் வடலூர் நோக்கி வருவதாக போலீசாருக்கு வந்த தகவலால் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூர்:

சென்னை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.

மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 4 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். அவர்கள் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூருக்கு காரில் வருவதுபோல் தெரிகிறது எனக் கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

ரெயில்வே போலீசார் மீண்டும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அந்த எண் சுவிட் ஆப் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று இரவு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

வடலூர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து நேற்று இரவு 10 மணி முதல் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வடலுர் 4 முனை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக கார் எதுவும் வருகிறதா என்று கண்காணித்தனர். ஆனால் கார் எதுவும் சிக்கவில்லை.தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் சந்தேகப்படும் படும்படியாக யாரும் சுற்றி திரிகின்றனரா? என்று போலீசார் சாதாரண உடையில் கண் காணித்து வருகின்றனர்.

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடலூர் மாவட்டத்தில் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலால் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News