செய்திகள்

பெண்ணை கொலை செய்த டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-03-28 17:04 GMT   |   Update On 2018-03-28 17:04 GMT
பெண்ணை கொலை செய்த டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் பக்கம் கட்டானிமேடு பகுதியை சேர்ந்த ரெங்கனின் மனைவி மஞ்சுளா (வயது 40). இவரது உறவினரான போதும்பொண்ணை சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் நங்கவள்ளியை சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார்(33) காதலித்து திருமணம் செய்துகொண்டார். மஞ்சுளாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். மஞ்சுளாவிற்கு 3 மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சொத்து தகராறில் மஞ்சுளாவை கொலை செய்ய சிவக்குமார் திட்டமிட்டார். கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2–ந் தேதி இரவு சிவக்குமார் தனது நண்பரான சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த ரகுமான் (35) உடன் சேர்ந்து மஞ்சுளாவை நச்சலூரில் காட்டுப்பகுதியில் அழைத்து சென்று அவரை கல்லை போட்டு கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், ரகுமான் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்பு இருந்ததாக சிவக்குமாரின் மனைவி போதும்பொண்ணு, அவரது அக்காள் உஷாவையும், அக்காள் கணவர் நாகராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா நேற்று தீர்ப்பளித்தார். இதில் சிவக்குமார், ரகுமான் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் போதும்பொண்ணு, உஷா, நாகராஜ் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் வேனில் நேற்று இரவு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News