செய்திகள்

ஈரோட்டில் முகத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் கொள்ளை முயற்சி

Published On 2018-03-22 17:19 IST   |   Update On 2018-03-22 17:19:00 IST
ஈரோட்டில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் நேற்று சின்னமுத்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

அந்த மர்ம நபர்கள் 2 பேரும் சுமதியிடம் இருந்து நகையை பறிக்க திட்டமிட்டு பின் தொடர்ந்து வந்தனர்.ஆனால் சுமதி தனது கழுத்தில் தங்க நகை அணிய வில்லை.

தாலிக்கயிறு மட்டும் அணிந்திருந்தார். அதை தூரத்தில் இருந்து பார்த்த அந்த மர்ம நபர்களுக்கு சுமதி தங்க நகை அணிந்திருப்பது போல தெரிந்துள்ளது.

எனவே சுமதி ஆள் நட மாட்டம் இல்லாத பகுதிக்கு வரும் வரை பின் தொடர்ந்து வந்தனர். ஆட் கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சுமதி வந்ததும் அவரது அருகில் அந்த மர்ம நபர்கள் வந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் சுமதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் சுமதியின் கழுத்தில் கிடந்ததை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போதுதான் அந்த நபர்களுக்கு சுமதி அணிந்திருந்தது தாலிக்கயிறு என்பது தெரியவந்தது. எனவே அதை பறிக்காமல் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் தனது முகத்தில் மிளகாய் பொடி தூவி கழுத்தில் கை வைத்ததால் சுமதி பதறிப்போய் திருடன்... திருடன்... என்று சத்தமிட்டார். ஆனால் அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் அந்த மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News