செய்திகள்

பெருந்துறை அருகே 2 அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-03-22 07:53 GMT   |   Update On 2018-03-22 07:53 GMT
பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை அந்த வழியாக வந்த குன்னத்தூர், கவுந்தப்பாடி மற்றும் ஆயிக்கவுண்டன்பாளையம் செல்லும் அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி ரோடு பகுதியில் உள்ளது சிலேட்டர் நகர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை அந்த வழியாக வந்த குன்னத்தூர், கவுந்தப்பாடி மற்றும் ஆயிக்கவுண்டன்பாளையம் செல்லும் அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, ஆர்.ஐ. ரேவதி, பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

ஈரோட்டில் இருந்து பெருந்துறை, சிலேட்டர் நகர் வழியாக துடுப்பதி வரை 12ஏ என்ற டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 8 முறை இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த டவுன் பஸ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காலை ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் இந்த சிலேட்டர் நகர் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் செல்வதால் இங்கிருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே இந்த சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பெருந்துறை அரசு பஸ் டெப்போ மேனேஜர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பெருந்துறை தாசில்தார் முன்னிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News