பண்ருட்டியில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு- வாலிபருக்கு வலைவீச்சு
பண்ருட்டி:
பண்ருட்டி லட்சுபதி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி செஷிட்டா(வயது 60). இவர் இன்று காலை வீட்டின் முன்பு தனியாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ‘டிப்டாப்’ உடையணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த செஷிட்டாவிடம் முகவரி கேட்பதுபோல் பேசினார்.
திடீரென்று அந்த வாலிபர் செஷிட்டா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். உடனே செஷிட்டா திருடன் திருடன் என்று கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் மாயாமாகி விட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர். #tamilnews