செய்திகள்
பண்ருட்டி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
பண்ருட்டி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையொட்டி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிகிருஷ்ணன், ராஜசேகர் தலைமையிலான போலீசார் இன்று காலை பலாப்பட்டு கெடிலம் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கானஞ்சாவடியை சேர்ந்த செல்வராஜ் (வயது 58), மாயவேல் (50) என்பதும், அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையொட்டி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.