செய்திகள்

தந்தை-தாய் சேர்ந்து வாழாததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-03-05 16:24 IST   |   Update On 2018-03-05 16:24:00 IST
அந்தியூர் அருகே தந்தை, தாய் சேர்ந்து வாழாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோபி:

அந்தியூர் அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் பெயர் சுபகணேசன் (வயது 20). லாரி டிரைவர்.

செங்கோடனும் ருக்மணியும் பிரிந்து வாழ்கின்றனர். இது அவர்களது மகனான சுபகணேசனின் மனதை பாதித்தது.

எனவே அவர் தனது தந்தையிடமும் தாயிடமும் பேசினார். ‘‘நீங்கள் 2 பேரும் பிரிந்து வாழ்வதால் எனது பெயர் கெட்டுப்போகிறது. எனவே நீங்கள் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள்’’ என்று கூறினார்.

ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் கடத்தூர் அருகே மோடர்பாளையத்தில் தங்கி இருந்த தனது தாய் ருக்மணியை பார்க்க சபகணேசன் வந்தார்.

அப்போது தாயிடம் இதுபற்றி பேசினார். ஆனால் ருக்மணி தனது கணவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து சாதகமான பதிலை சொல்லவில்லை.

இதனால் சுபகணேசன் விரக்தி அடைந்து தூக்குபோட்டுக்கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபகணேசன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews 

Similar News