செய்திகள்

தமிழ்நாட்டுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க ஏற்பாடு: அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் ஜப்பான் பயணம்

Published On 2018-02-26 02:59 GMT   |   Update On 2018-02-26 02:59 GMT
தமிழ்நாட்டுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க 2 அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் இன்று ஜப்பான் செல்கின்றனர்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டு கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கம்பெனிகளின் முதலீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் நாட்டு கம்பெனிகள் பங்கேற்று, பல்வேறு திட்டங்களை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் ஜப்பான் நாட்டில் இருந்து முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் உயர் மட்டக்குழுவினர் 26-ந்தேதி (இன்று) ஜப்பான் நாட்டுக்கு செல்கின்றனர். இந்த குழுவில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர், தொழில்துறை சிறப்பு செயலாளர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் செயல் துணை தலைவர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மார்ச் மாதம் 2-ந்தேதி வரை ஜப்பானில் பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது கருத்தரங்குகள், ஜப்பான் நாட்டு தொழில் அதிபர்களுடன் கலந்தாய்வு கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் உள்ள பல்வேறு வர்த்தக சங்கங்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம், தமிழக அரசு ஆகியவை இணைந்து செய்துள்ளன.

சில கம்பெனிகளுக்கும் சென்று, நிர்வாகிகளை சந்தித்து தங்களுடைய 5 நாட்கள் பயணத்தின்போது தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அவர்கள் அழைப்பு விடுக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #tamilnews
Tags:    

Similar News