செய்திகள்

காவிரி பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்காதது ஏன்? வைகோ கேள்வி

Published On 2018-02-26 01:20 GMT   |   Update On 2018-02-26 01:20 GMT
சென்னையில் நடந்த விழாவின்போது, காவிரி பிரச்சினை குறித்து முதலமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு, பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்காதது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் 48 ஆண்டுகளாக ஒரு குடும்பம் நாட்டை பாழ்படுத்திவிட்டது, 48 மாதத்தில் நாட்டை உயரத்தில் வைத்துவிட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். தமிழகத்திற்கு 48 ஆண்டுகளில் நடக்காத கேடுகளை பிரதமர் நரேந்திரமோடி அரசு 48 மாதங்களில் செய்து உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று பிச்சை கேட்கவில்லை. காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகிறார். 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.



தமிழகத்தில் அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவின்போது, முதலமைச்சர் அதுபற்றி பேசினார். அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்காதது ஏன்? இதுபற்றி பேசினால் கர்நாடக தேர்தலில் அரசியல் பாதிக்கப்படும் என்று அவர் கருதி இருக்கலாம். நீண்ட நாட்களுக்கு தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கமுடியாது.

தமிழக கவர்னர் தொழில் தொடங்க விரும்புபவர்கள் கவர்னர் மாளிகைக்கு வரலாம் என அழைத்து உள்ளார். அவர் தமிழகத்திற்கு கவர்னரா? இல்லை தொழில் அதிபர்களுக்கு இடைத்தரகரா? கேட்க நாதியில்லை என்பதால் ஒவ்வொரு ஊராக சுற்றி பார்த்துக்கொண்டு கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து பணிகளை கேட்பது என்ன வேலை?

சுதந்திர இந்தியாவில் எந்த கவர்னரும் செய்ய துணியாத காரியத்தை செய்துகொண்டு இருக்கிறீர்கள். வடகிழக்கு மாநிலங்களில் கவர்னர் செய்த திருவிளையாடல்களை தமிழகத்திலும் செய்யலாம் என்று நினைக்கவேண்டாம்.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, கவர்னர் ஆட்சி நடப்பது போல் அவர் தமிழகம் முழுவதும் சுற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக வேண்டும். கவர்னரின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News