செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2018-02-23 04:26 GMT   |   Update On 2018-02-23 04:26 GMT
தரமற்ற உணவு வழங்கியதை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பல்கலைக்கழக வளாகத்தில் பல விடுதிகள் உள்ளன. அங்குள்ள ரோஜா இல்ல விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது. விடுதியில் சுகாதாரம் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை என்று மாணவிகள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று மாணவிகள் விடுதி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு நேர உணவை புறக்கணித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் விடுதி வார்டன்கள் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும்போது, எங்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கக்கோரி பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேராசிரியர்கள் உறுதி அளித்தனர். அதன் பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews

Tags:    

Similar News