செய்திகள்

திருப்பத்தூரில் பெட்ரோல் பங்க், அரசு பஸ்சில் பணம் திருட்டு- 2 பேர் கைது

Published On 2018-02-09 18:15 IST   |   Update On 2018-02-09 18:15:00 IST
திருப்பத்தூரில் பெட்ரோல் பங்க் மற்றும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் உள்ள மதுரை சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தானிப்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 54) என்பவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வந்தார்.

அப்போது அங்கு வந்த திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், ஜெயச்சந்திரனின் கைப்பையில் இருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடினான்.

இதைப்பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிறுவனை பிடித்து திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

திருப்பத்தூர் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (50). இவர் நேற்று திருப்பத்தூரில் இருந்து திருமயத்திற்கு அரசு பஸ்சில் சென்றார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கடலூரைச் சேர்ந்த பவதாரணி (38) என்பவர் பழனியம்மாள் வைத்திருந்த ரூ. 4 ஆயிரத்து 500-யை திருடினார்.

இதை பார்த்த சக பயணிகள், பவதாரணியை பிடித்து திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய பெண்ணை கைது செய்தனர். #tamilnews

Similar News