செய்திகள்
கோப்புப் படம்

காவிரி விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்தித்து பேச தமிழக முதல்வர் பழனிசாமி முடிவு

Published On 2018-01-30 09:13 GMT   |   Update On 2018-01-30 09:13 GMT
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தன்ணீர் திறக்க இயலாத சூழல் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசணை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.

ஆலோசணைக் கூட்டம் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்த காரணத்தினால், டெல்டா மாவட்ட பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, டெல்டா மாவட்ட சம்பா பயிரை காப்பாற்றும் நோக்கில் காவேரி நீரை திறந்துவிட கர்நாடகா அரசை வலியுறுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 29.1.2018 அன்று தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பெங்களூரூ சென்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அவர்களை நேரில் சந்தித்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிரை காப்பாற்ற, காவேரி நீரை திறந்துவிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்களிடம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள் நேரில் சென்று வலியுறுத்த நாள் மற்றும் நேரம் கோரி, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கர்நாடக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News