செய்திகள்

பட்டு நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சத்தியமங்கலத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-24 21:32 IST   |   Update On 2018-01-24 21:32:00 IST
பட்டு நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:

பட்டு நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் இன்று 10-வது நாளாக தொடர்கிறது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி உள்ளனர்.

அவர்களுக்கு கோரா பட்டு சேலை தயாரிக்க பாவு, நூல் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள் வழங்காததால் பட்டு சேலை தயாரிப்பு நடக்கவில்லை. இதனால் தினமும் ரூ. 2½ கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வேலை நிறுத்தம் நடப்பதற்கு முக்கிய கோரிக்கையான பட்டு நூல் விலை உயர்வை குறைப்பது குறித்து இதுவரை யாரும் கைத்தறி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

எனவே அடுத்த கட்ட போராட்டம் நடத்த கைத்தறி உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். கைத்தறி நெசவாளர்களை திரட்டி சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஊர்களில் இருந்த கைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், திரளாக கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

ஆனால் இந்த போராட்டத்தில் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதி கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதி கைத்தறி நெசவாளர்களை அழைத்து செல்ல 2 பஸ்கள் வந்திருந்தன.

ஆனால் கைத்தறி நெசவாளர்கள் அதில் ஏறி சத்தியமங்கலத்துக்கு செல்லவில்லை. இதற்கு காரணம் கேட்டபோது அவர்கள் கைத்தறி உற்பத்தியாளர்கள் மீது குற்றச்சாட்டு கூறினர்.

நாங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பட்டு சேலை ரகத்துக்கு உரிய, சரியான, நியாயமான கூலியை கைத்தறி உற்பத்தியாளர்கள் நிர்ணயிக்கவில்லை. போனசும் கொடுக்கவில்லை.

15-ந் தேதி முதல் போராட்டம் என அறிவித்து விட்டு எங்களுக்கு பாவு, நூல் கொடுக்காமல் வேறு ஊரில் உள்ள கைத்தறி கூடத்தில் பாவு, நூல் கொடுத்து பட்டு சேலை உற்பத்தி செய்துள்ளனர்.

இது எங்களை ஏமாற்றுவதுபோல உள்ளது. எனவே தான் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செல்லவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு செல்லாமல் புறக்கணித்ததால் அந்தியூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Similar News