வாலாஜா அருகே மாடு விடும் விழாவில் கோஷ்டி மோதல்
வாலாஜா:
வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மாடுவிடும் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன. அசம்பாவிதம் தவிர்க்க பாதுகாப்பு பணியில் வாலாஜா போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் 2 பிரிவினர்கள் பூஜைகள் செய்து விழாவை தொடங்குவது வழக்கம் நேற்றும் அவ்வாறு ஒரு பிரிவினர் பூஜை செய்த பின்னர் மற்றொரு பிரிவினர் பூஜை செய்ய தொடங்கினர்.அப்போது மற்றொரு பிரிவினை சேர்ந்தவர்கள் கல்லை வீசியும் சத்தம் போட்டும் தகராறு செய்துள்ளனர்.
இதனால் 2 பிரிவினர்களும் வாக்குவாதம் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை டி.எஸ்.பி. ஜெயக்குமார், வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலவரத்தை அடக்கினர்.
அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்துக்கு காரணமான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.