செய்திகள்

சிதம்பரம்-காட்டுமன்னார்கோவிலில் 5 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

Published On 2018-01-10 17:19 GMT   |   Update On 2018-01-10 17:19 GMT
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் உளுந்து, மணிலா பயிரும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி எடுத்தது. இரவு நேரங்களில் கடும்பனிப்பொழிவும் ஏற்பட்டது. இதனால் வய தானவர்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய சாரலாக பெய்து கொண்டிருந்தது.

சிதம்பரம், காட்டுமன் னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் திடீரென்று பலத்த மழை கொட்ட தொடங்கியது. 5 மணி நேரம் தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

சிதம்பரத்தில் பலத்த மழையால் சிதம்பரம் நகர், நேரு நகர், தாயுமானவர் நகர், சிவசக்தி நகர், பரதேசி நகர், வேலவன் நகர், எம்.ஆர்.நகர் போன்ற பகுதிகளில் வீடுகளின் முன்பு மழைநீர் தேங்கியுள்ளது.

சிதம்பரத்தில் வேணு கோபாலசாமி சாலை, மன்னார்குடி தெரு போன்ற பகுதிகளிலும் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் உளுந்து, மணிலா பயிரும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் காவனூர், புதுக்குப்பம், நகரப்பாடி, சேத்தாம்பட்டு, பூண்டி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெய்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். #tamilnews

Tags:    

Similar News