செய்திகள்
அதிகாரிகளுடன் பஸ்சில் கலெக்டர் பயணம் செய்தார்.

அதிகாரிகளுடன் பஸ்சில் பயணம் செய்த கடலூர் கலெக்டர்

Published On 2017-12-27 12:59 IST   |   Update On 2017-12-27 12:59:00 IST
பண்ருட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுடன் கடலூர் கலெக்டர் பிரசாந்த் பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டராக பிரசாந்த் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 30-ந் தேதி ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமுக்கு தனது காரில் செல்லாமல் அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து இனி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனுநீதிநாள் முகாம் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இதேபோல் அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் செல்வேன் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடி பகுதியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள கலெக்டர் பிரசாந்த் அரசு பஸ்சில் செல்ல முடிவு செய்தார். கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் வரவேண்டும் என்று உத்தரவிட்டார். அனைத்து அதிகாரிகளும் இன்று காலை அங்கு வந்தனர்.

அங்கு அரசு பஸ் வரவழைக்கப்பட்டது. அந்த பஸ்சில் கலெக்டர் பிரசாந்த் முதலில் ஏறி அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா உள்ளிட்ட 50 அதிகாரிகள் அதே பஸ்சில் ஏறினர்.

பஸ்சில் கலெக்டர் ஏறுவதற்காக சென்ற காட்சி.

பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் பைத்தாம்பாடிக்கு சென்றது.

அங்கு சென்றதும் பஸ்சில் இருந்து கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் கீழே இறங்கி முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர்.

அங்கு கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பைத்தாம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். பின்னர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பஸ்சில் பயணம் செய்தது ஏன்? என்பதற்கு கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது:-

நான் மற்றும் அதிகாரிகள் ஒரே பஸ்சில் கிராம சபை கூட்டத்துக்கு செல்வதால் அனைவரும் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல முடியும். மேலும் தனித்தனியாக கார்களில் சென்றால் செலவு அதிகமாகும். இதை தவிர்க்கவே பஸ்சில் செல்கிறோம் என்றார்.

செலவை குறைக்க பஸ்சில் வந்த கலெக்டரின் நடவடிக்கையை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.

Similar News